புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உரிமையை பெறுவதற்கு அரசு சார்பில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்திடவும், கட்சிகள் சார்பில் மக்கள் இயக்கத்தை உருவாக்கவும்
மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்.
புதுச்சேரி மாநிலம் அதிகாரமற்ற அரசாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ரிமோட் கண்டரோலில் செயல்படும் பொம்மை அரசாக இருக்கிறது. இந்தியாவில் 11 மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பிரெஞ்சு இந்திய விடுதலைப் பிரதேசமான புதுச்சேரி இந்திய ஒன்றியத்தோடு இணைந்து 59 ஆண்டுகளாகியும், சட்டப்பேரவைத் துவங்கி 50ஆண்டுகளாகியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. இது மாநில சுயாட்சிக்குஎதிரானது மட்டுமல்ல மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதும், மக்களை வஞ்சிப்பதுமாகும்.
புதுச்சேரி சட்டப்பேரவைகளில் 8.5.1987 முதல் 31.07.2012 வரையிலான காலகட்டத்தில் 11 முறைமாநில அந்தஸ்து கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2006 ஆகஸ்ட் 2 ல் மாநிலங்களவை மற்றும் மக்களவைகளில் தாக்கல் செய்த அறிக்கையில்புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மத்திய ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளை, மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். நாட்டில் பல சட்டங்கள் , திட்டங்கள் நிர்வாக நடைமுறைகள், அதிகார பகிர்வு..... உள்ளிட்டபலவற்றில் வரையறைகள் , தேவையையயாட்டி மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன . ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னாள் மத்திய திட்டக்குழுவால் உருவாக்கப்பட்ட மாநில அந்தஸ்து தொடர்பான வரையறையை மறு மதிப்பீடு செய்ய மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை.
1991 முதல் மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களால் துவக்கிவைக்கப்பட்ட நவீன தாராளமயக்
கொள்கை கடந்த 22 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கையை தலைகீழாகபுரட்டிப் போட்டுள்ளன. ஏழைகள்,பணக்காரர்களுக்கான இடைவெளி மேலும் மேலும் அதிகரித்துள்ளது. கல்வி, சுகாதாரம், பொது வினியோகத்திட்டம், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறுத் துறைகளில் மானியத்தை குறைத்து வருகிறது. மக்களுக்கான சமூகப்பாதுகாப்பு, அளிக்க வேண்டிய மத்திய அரசு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விலக்கிக்கொண்டுவருகிறது. மறுபுறத்தில் அந்நிய, இந்தியப் பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளை மானியம் மற்றும் சலுகைகளாக வாரி வழங்கி வருகிறது.கடந்த (2012-2013) ஆண்டில் மட்டும் 11 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் இருந்தால்
பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை போட்டு மக்களின் சமூக நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருக்க முடியும். புதுச்சேரி மாநில அரசின் கடனையும் ரத்து செய்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உதவியிருக்க முடியும். நிதி ஆதாரங்களையும், அதிகாரங்களையும் மத்தியில் குவித்து வைத்துக்கொண்டு மாநிலத்தின் சுயாட்சிக்கு எதிராக மத்திய அரச செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதி உதவி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. மாற்றுக்கட்சி ஆட்சி என்பதால் நிதி பகிர்மானத்தில் புதுச்சேரி மாநிலம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கைத்தரமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலைக்கு முழு முதற்காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் தவறான கொள்கையாகும்.
புதுச்சேரி மாநில அரசு மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றி பால்விலை உயர்வு,பஸ்கட்டண உயர்வு, மதிப்பு கூட்டிய வரிஉயர்வு என மக்கள் மீது விலைவாசி மற்றும் வரிச்சுமையை ஏற்றிவருகிறது. மறுபுறத்தில் வேலைத்திணிப்புகள், கூடுதல் வாரியத்தலைவர் நியமனங்களும் ஏற்புடையதல்ல. இவைகள் கட்டுப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
தற்போதுள்ள நிதி நெருக்கடியின் கொடூர விளைவுகளில் இருந்து மாநில மக்களைப் பாதுகாக்கவேண்டியது அவசர அவசியக் கடமையாகும். புதுச்சேரி மாநிலத்தின் முழுக்கடனையும் ரத்து செய்து, மாநில அந்தஸ்து உரிமையைப் பெறுவதாகும். இந்த நோக்கத்திற்காக அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டியுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆட்சியும், கட்சியும் ஒன்றல்ல. இரண்டிற்கும் அதிகார எல்லையும், செயல் தளமும் , தன்மையும் மாறுபட்டதாகும். ஆகவே, மாநில அரசு அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை உடனடியாக நடத்திட முன்வரவேண்டும். மறுபுறத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களைஒன்றிணைத்து மாநில சுயாட்சி உரிமையை பெறுவதற்கு மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும்.
அரசு சார்பில் நிர்வாக ரீதியான நடவடிக்கைளும் கட்சிகள் சார்பில் ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் புதுச்சேரிக்கு உள்ள கடன்களை ரத்து செய்து மாநில அந்தஸ்து பெற முடியும் என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது. புதுச்சேரியின் வளர்ச்சி மாநில மக்களின் நலன் என்ற பொதுத் தன்மையில் மாநில அந்தஸ்துக்காக மார்க்சிஸ்ட் கட்சி அரசுடனும், மக்கள் இயக்கத்துடன் உறுதியாக இணைந்து போராடும் என மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண் (வெ.பெருமாள்) செயலாளர்