Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, May 6, 2012

துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்க சென்ற உண்மை அறியும் குழுவின் மீது காவல்துறை பின்புலத்தில் நடந்துள்ள ஜனநாயக விரோத தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

0 comments
பத்திரிகை செய்தி

      துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்க சென்ற உண்மை அறியும் குழுவின் மீது காவல்துறை பின்புலத்தில் நடந்துள்ள ஜனநாயக விரோத தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.
1)       புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடங்கி, தற்போதைய என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி
வரையிலும், கொலை, கொள்ளை, வழிபறி, திருட்டு... உள்ளிட்ட சமூக குற்றங்கள் தொடர்கிறது. வெடிகுண்டு வீசி கொலை செய்யும் அளவிற்கு குற்றத்தின் தன்மை வளர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிறந்த சில தினங்களே ஆன தனது குழந்தைக்கு தேவையான பொருள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அப்பாவி ஏழைத் தொழிலாளி ஜெகதீசன் கடந்த மார்ச் 21ஆம் தேதி குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆள்மாறாட்டத்தில் நடந்த படுகொலை, இறந்த ஜெகதீசனின் குடும்ப பின்னணி அறிந்து மக்கள் பதறிப்போனார்கள். புதுச்சேரி அரசு கொலைக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திட உறுதியான நடவடிக்கை எடுத்திடவும், இறந்து போன ஜெகதீசனின் மனைவி மற்றும் இளம் குழந்தைகளை பாதுகாத்திட உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

2)       நடந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ரௌடிகளை கைது செய்ய வலியுறுத்தியும்,
இறந்த அப்பாவி ஜெகதீசன் குடும்பத்திற்கு நிவாரணம் கோரியும் அரசியல் கட்சிகள் மற்றும்  ஜனநாயக இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் பின்னணியில் காவல்துறையினர் சமூகவிரோதிகளைப் பிடிக்க தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 24.04.2012ல் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசி, தப்பியோட முயற்சித்த கொலையாளியை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்ததாக செய்தி வெளியானது. காவல் துறையினரின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றனர். இப்பிரச்சனையில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் உண்மை அறியும் குழு அமைத்து விசாரணை செய்யப்போவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காவல்துறையினர் பதட்டமடைந்தனர். உண்மை அறியும் குழுவை விரட்டியடிக்க காவல்துறையினர் முன் தயாரிப்புகளை செய்துவந்துள்ளனர். விசாரணைக்கு சென்ற உண்மை அறியும் குழுவினரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, மிரட்டி விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்வு ஜனநாயகத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும், மனித உரிமைக்கும் விடப்பட்டுள்ள சவாலாகும். காவல் துறையினரின் பின்புலத்தில் மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை தடுக்க முற்பட்டது என்பது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. இது குறித்தும், உண்மை அறியும் குழுவின் ஜனநாயக கடமையை தடுத்த சம்பவம் குறித்தும் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. நடந்த சம்பவங்களுக்கு மாநில அரசும், காவல்துறையும் முழுபொறுப்பேற்க வேண்டும்.

3)       மாநிலத்தில் தொடரும் சமூகக் குற்றங்களை தடுத்திட மாநில அரசு உறுதியான நடவடிக்கை
எடுத்திட வேண்டும். மேலும் சமூக விரோதிகளுடன் தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல்துறை கொள்கையில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தவும் அரசு முன்வரவேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் சமூகவிரோதிகளுக்கு அமைப்புகளில் இடமளிப்பதை தவிர்த்து குற்றப் பெருக்கத்தை கட்டுப்படுத்த, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முன்வரவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகிறது.


தேதி : 02-05-2012
வெ. பெருமாள்
                                                                                                      பிரதேச செயலர்

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com