ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான நில ஆர்ஜிதம் செய்ததில் முறைகேடு புதுச்சேரி அரசு விசாரணைக்கு உத்தரவிட மாரக்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை செயலர்,மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பது வருமாறு,கிருமாம்பாக்கம் வருவாய் கிராமத்திற்கு அருகில் உள்ள பன்னித்திட்டில் அட்டவணை இனத்து மாணவர்களுக்காக உண்டு உறைவிடப் பள்ளிக்கான இடம் ரூ.13.64 கோடிக்கு கையகப்படுத்தப்பட்டது.மேற்படி நிலம் கடலோரத்தில் விதிமுறைகளை மீறி கூடுதல் விலைக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது.அந்த நிலத்தில் கட்டிடம் எழுப்புவதற்கு தகுதியான நிலம்தானா என்பதும் சந்தேகத்திற்கு உட்பட்டதாகும்.ஆதிதிராவிடர் நத்துறை மூலம் நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளது எனவே மார்க்சிஸ்ட் கட்சி இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
பேப்பர் மில்
அதேப்போல் புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பேப்பர் மில் அமைப்பதற்காக புதுச்சேரி பேப்பர்° லிமிடெட் அப்போதைய இயக்குநர் ஞானகிரி கனேசன் அரசிடம் நிலம் ஆர்ஜிதம் செய்துதர கோரினார்.அதன்படி நில ஆர்ஜிதச் சட்டம் 1894 பிரிவு 41ன் கீழ் 1977 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.மேற்படி ஒப்பந்தத்தின் படி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் 10 சிறுவிவசாயிகளிடமிருந்து 5ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கையகப்படுத்தப்பட்டது.அதற்கு இழப்பீடும் வழங்கப்பட்டது.அரசு கையகப்டுத்திய நிலத்துடன் ஒப்பந்தத்திற்கு அடங்காத சுமார் 7ஏக்கர் புறம்போக்கு நிலமும் பேப்பர் மில் நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.மேற்படி ஒப்பந்தத்தில் நிலம் கையகப்படுத்திய நோக்கத்திற்கு பயன்படுத்தாதபட்சத்தில் அரசே அந்த நிலத்தை கையகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் பொது நோக்கத்திற்கோ அல்லது பழைய நில உரிமையாளர்களுக்கோ கூட வழங்கலாம் என்றும் குறிப்பிடுகிறது.ஆனால் ஒப்பந்தப்படி அரசு தனக்குள்ள உரிமையை பயன்படுத்தி பொதுப்பயன்பாட்டிற்கு நிலத்தை கையகப்படுத்த தவறியுள்ளது.ஒப்பந்தப்படி ரூ.1.50 இலட்சத்திற்கும் குறைவான விலைக்கு எடுத்திருக்க வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தாததால் அரசுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதோடு அதிகாரத்தில் இருந்த அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்தற்கான முகாந்திரங்கள் உள்ளதாக மாரக்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.
எனவே மேற்படி இரண்டு சம்பவங்களிலும் அரசுக்கு மிகப்பெரும் இழப்பு திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் ஆட்சியாளர்கள் மற்றும அதிகாரிகள் ஆதாயம் அடைந்துள்ளனர்.இது குறித்து நியாயமான விசாரணைக்கு உத்திரவிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.