புதுச்சேரி மாநிலத்தின் முதலீட்டு வருவாய் உயர்ந்திட, நகர் மற்றும் கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்திட பஞ்சாலைத் தொழிலை நவீனப்படுத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புராதன பஞ்சாலைகளான ரோடியர், சுதேசி, பாரதி மில்கள் வெறும் கட்டிடங்களும், இயந்திரங்களும் கொண்ட ஆலைகள் அல்ல. மாறாக 8 மணி நேர வேலை உரிமையை பெற்றிட்ட தொழிலாளி வர்க்கத்தின் உரிமைப்போராட்டத்தின் அடையாளமாகும். இப்போராட்டம் பிரஞ்சு விடுதலைக்கு உத்வேகம் அளித்தது என்பது வரலாறு. மேலும் மாநிலத்தின் பொருளாதாரத்திலும், மக்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு தளத்திலும் பஞ்சாலைகள் முக்கிய பங்குவகித்துவந்துள்ளன. ஆகவே, புதுச்சேரியின் பஞ்சாலைகளை அடிச்சுவடில்லாமல் அழித்து, சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முனையும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக எதிர்க்கிறது. மேலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் மாற்று இடத்தையும், பொருத்தமான திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் விவசாயம் சார்ந்த தொழிலான புதுச்சேரி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி இலாபகரமாக இயக்கிட மாநில அரசு திட்டங்களை உருவாக்கிட வேண்டும். மத்திய அரசு அதற்கு தேவையான நிதியை வழங்கவேண்டும். இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பஞ்சாலைத் தொழிலுக்கு தேவையான பருத்தி உற்பத்தியை அரசு ஊக்கப்படுத்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் உயரும். மேலும் பஞ்சாலைகள் இலாபத்தில் இயங்குகிற போது மாநில அரசுக்கு அந்நியச் செலாவணி உள்ளிட்ட முதலீட்டு வருவாய் பெருகும். இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கான புதியத் திட்டங்களை செயல்படுத்த முடியும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன், மாநிலத்தின் முன்னேற்றம் என்ற பொதுத்தன்மையில் செயல்பட முன்வர வேண்டும்.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும் அளித்த வாக்குறுதிகளான புதுச்சேரி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது அறிவிப்புகளாகவே உள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக வாக்குறுதிகளை அளிப்பதும், காங்கிரசும், என்.ஆர்.காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு மக்களை ஏமாற்றுவதும் மலிவான அரசியலாகும்.
ஆகவே, மாநிலத்தின் முதலீட்டு வருவாயைப் அதிகரிக்க, நகர்ப்புற, கிராமப்புற பொருளாதாரம் மேம்பட, பஞ்சாலைத் தொழில்களைப் பாதுகாத்திட மாநில அரசு திட்டம் உருவாக்க வேண்டும். மேற்படி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தேவையான நிதியை அளித்து உதவிட வேண்டும். மேலும் மூடியுள்ள ரோடியர் பஞ்சாலைகளை இயக்கவும், வழங்கப்படாமல் உள்ள சம்பள பாக்கியினை உடன் வழங்கவும் மாநில அரசு முன்வர வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் அடையாளமாகவும், பிரஞ்சு இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உலைக்களங்களாகவும் செயலபட்டு வந்த பஞ்சாலைத் தொழில்களை பாதுகாத்திட, அனைத்துப்பகுதி மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இங்ஙனம்
(வெ. பெருமாள்)
செயலாளர்
