Tuesday, March 19, 2013
Press News - CPI(M) Statement regards Sri Lanka Tamilian Issue
19.03.2013
பத்திரிக்கைசெய்தி
இலங்கை போர்குற்றம் தொடர்பான பிரச்சனையில் மத்திய அரசு தனது உறுதியான நிலைபாட்டை தெரிவிக்க வலியுறுத்தி மத்திய இணையமைச்சர் திரு நாராயணசாமியின் அலுவலகம் சென்றவர்கள் மீது காவல் துறையும், காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதை மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
இலங்கை ராணுவத்திற்கும், எல்டிடிஇ- க்கும் இடையிலான போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் கடந்தபின்னும், போரின் போது நிகழ்த்தப்பட்ட மனிதபடுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மீது இதுவரையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஏதுமறியாத அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் உள்ளன. கடந்த 2012 மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இலங்கை அரசே அமைத்த போரின் போது கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் மறுசீரமைப்புக்கான ஆணையம் அளித்த பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டுமென அத்தீர்மானம் வலியுறுத்தியது. ஆனால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
இலங்கை உள்நாட்டுப் போரின் கடைசிக்கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உயர்மட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் சுயேட்சையான விசாரணைக்கு இலங்கை அரசை ஏற்கச் செய்யவும், தமிழ் மக்கள் வசிக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு சுய ஆட்சி உரிமை வழங்கும் அரசியல் சட்டம் 13 வது பிரிவை செயல்படுத்தவும் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதற்கு உலகநாடுகளின் ஆதரவைப்பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை தனது நிலையை தெளிவுபடுத்தாதது அழ்ந்து சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.
இலங்கை போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வில் இருந்து மாணவர் சமூகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராடி வருகிறார்கள். இந்தப்பின்னணியில் மத்திய அரசு தனது உறுதியான நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய இணையமைச்சர் திரு நாராயணசாமி அலுவலகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்றுள்ளனர். காவல் துறை உதவி ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்து சென்றவர்களை காவல் துறையினரும் , சில காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். காவல் துறை மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் இந்த அத்து மீறலை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இதில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மாநில முதல்வர் மற்றும் காவல் துறை தலைவரை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 2009 முருங்கப்பாக்கத்தில் இலங்கை போர்க்குற்றத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த தமிழ் அமைப்பினர் மீது காங்கிரஸ் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல் தொடுத்ததை மாநில மக்கள் மறந்துவிட கூடியதல்ல.
இந்திய வரலாற்றில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மாற்று கட்சி ஆட்சிகள் களைப்பு, அவசரகால தடைச்சட்டம், மாற்றுக்கட்சி ஆட்சிக்கு எதிரான அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான
நெருக்கடி,மாநில சுயாட்சிக்கு எதிரான அணுகுமுறை, மத்தியில் அதிகார குவிப்பு .... என ஜனநாய மாண்புகள் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. தற்போது போராடும் ஜனநாயக சக்தியினர் மீது காங்கிரஸ் கட்சியினரும் , காவல் துறையினரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஆகவே, மாநில மக்கள் ஜனநாயக உரிமையை பாதுகாக்கவும், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காவல் துறையினர் நடத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எதிரக்கவும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவண்
(வெ.பெருமாள்)
செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
