பத்திரிகைச் செய்தி – 13.03.2013
புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு அநியாய உத்தேச மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
புதுச்சேரி மாநிலத்தில் மின்சாரத்தை கொள்முதல் செய்து விற்பனை செய்வதில் 306.6 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 306.6 கோடி ரூபாய் அளவிற்கு அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் பல மடங்கு கட்டணம் உயர்த்த புதுச்சேரி மின் துறை உத்தேசித்துள்ளது. மின் துறையின் உத்தேச கட்டண உயர்வை எந்த மாற்றமும் செய்யாமல் மின் கட்டண உயர்விற்கு அனுமதி வழங்கிட இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு மற்றும் புதுச்செரி மின் துறையின் 3 மடங்கு 4 மடங்கு அளவிலான கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.
மின்சாரத்தை தனியார்மயமாக்கவும், மின் கட்டண உயர்விற்கு வழிவகுக்கவும் முந்தைய பாஜக ஆட்சியில் மின்சார சட்டம் 2003ல் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மின் உற்பத்தி – கொள்முதல்-வினியோகம் என மாநில மின்வாரியங்களை கூறுகளாக பிரித்து தனியார் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கு வழிவகை செய்யப்பட்டது. மேலும் மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமையை அரசுப்பொறுப்பில் இருந்து விடுவித்து அதிகாரம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் எதிர்ப்பை சமாளிக்கவும், கட்டண உயர்வை நியாயப்படுத்தவும், மக்கள் மீது மின் கட்டண உயர்வை திணிக்கவுமே, இத்தகைய அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய காங்கிரஸ் அரசு இத்தகைய மக்கள் விரோத மின்சர கொள்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
மின்சார சட்டம் 2003ன் கீழ் மாநில அரசு, மின் துறை மூலம் 306.6 கோடி அளவிற்கு கட்டண உயர்வை அதிகரிக்க முயற்சிக்கிறது. வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய மாற்றுவழிகள் குறித்து ஆராயாமல் விலைவாசி உயர்வால் துன்பப்படும் மக்களுக்கும் பல மடங்கு கட்டண உயர்வு மக்களுக்கு எதிரானதாகும். ஆகவே, மாநில அரசு மின் இணைப்புக்காக மின் நுகர்வோர்கள் அளித்துள்ள முன்வைப்புத் தொகையை வருவாய் இனத்தில் முதலீடு செய்யவேண்டும். 25% மின்சார இழப்பை 10%க்குள் குறைத்திட, மின் திருட்டை கட்டுப்படுத்தி, மின் வினியோகப் பாதையை நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றியமைத்திட வேண்டும். அரசு மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள், தனியார் தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள மின்கட்டண பாக்கிகளை வசூல் செய்வது, மின்சார சிக்கனம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரிசா மாநிலத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கத்தைப் பயன்படுத்தி மின்சாரம் பெறுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மாநில அரசும், மின் துறையும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வீட்டு உபயோகம், விவசாயம், சிறு, குறுத்தொழில்கள், மற்றும் சிறிய வணிக நிறுவனங்களுக்கு கட்டண உயர்விலிருந்து விலக்களிக்க வேண்டும், என்றும் ஒருவிளக்கு வசதி, ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சார சலுகை தொடர வேண்டும் மின்கட்டண உயர்வுக்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் போராட முன்வரவேண்டுமாய் மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு கேட்டுக்கொள்கிறது.
இங்ஙனம்
(வெ. பெருமாள்)
செயலாளர்
