பத்திரிகைச் செய்தி
காமராஜர் கல்வி உதவி திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் செண்டாக் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது. கல்வி உதவி நிதி வழங்குவதில் விதிமுறைகளை மீறியும், மாணவரல்லாதவர்களுக்க்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் நிதி வழங்கிய மிகப்பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் வங்கி அதிகாரிகள் உயர்கல்வித்துறை ஊழியர்கள் கூட்டுக் கொள்ளை அடித்துள்ளனர். இத்தகைய மிகப் பெரும் மோசடியில் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இது குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மத்திய, மாநில அரசுகளின் நவீன தாராளமயக் கொள்கையின் விளைவாக மிகப்பெரும் ஊழல், முறைகேடுகள் பெருகிவருகிறது. மேலும் அதிகரித்து வரும் நுகர்வு கலாச்சாரம், எதைச் செய்தேனும் செல்வத்தை குவிப்பு போன்ற உணர்வுகளும் மேலோங்கி வருகிறது. மேற்படி செண்டாக் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் சீட்டு பிடிக்க துவங்கி அதனால் ஏற்பட்ட விளைவுகளால் இத்தகைய நிதி மோசடியில் துணிந்து ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே மின் துறையில் வசூலிக்கப்பட்ட மின்கட்டணத் தொகையை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்திய வகையில் நிதி முறைகேடும் நடந்தது அம்பலத்திற்கு வந்துள்ளது. சில அரசு ஊழியர் அதிகாரிகள் பணி நியமன நிபந்தனைகளை மீறி வட்டித்தொழில், சீட்டுத்தொழில், ரியல் எஸ்டேட் தொழில் என பலதொழில்கள் செய்துவருகின்றனர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருமானம் – சொத்து விபரம் பற்றிய விவரங்களை அரசு பெறுவதில் உறுதி காட்டுவதில்லை. ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளின் நேர்மையற்ற அணுகுமுறையும் இத்தகைய தவறுகளுக்கு உதவி செய்கிறது. ஆகவே, ஊழல், முறைகேடுகளை தவிர்த்திட மாற்றுக்கொள்கையும், மேலிருந்து கீழ்வாரியாக உறுதியான நடவடிக்கையும் தேவை என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.
மாநில அரசு செண்டாக் மாணவர்களுக்கு காலம் கடந்து நிதி உதவி வழங்குவது, சில நேரங்களில் ஒரு பகுதி மாணவர்களுக்கு மட்டும் வழங்குவது போன்ற நடைமுறை தவறுகளுக்கு வாய்ப்பளிக்கிறது. ஆகவே, காலதாமதமாக நிதி உதவி வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் அரசு நிதி உதவி வழங்காததால் தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர்களை நிர்பந்தித்து கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
கடன் வாங்கி, சொத்துகளை விற்று படிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவதால், படிப்பை முடித்து பணிக்குச் செல்லும் இளைஞர்களிடம் இயல்பாகவே சமூகப் பொறுப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. இது சமூகத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, மாநில அரசு காலதாமதம் இல்லாமல் கல்வி உதவி நிதி உதவி வழங்கவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவும், நடந்துள்ள நிதி மோசடி குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு உத்தரவிடவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.