புதுச்சேரி டிச 1
சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கி தர முடியாதது தான் தலித் மக்கள் உரிமையை பாதுகாக்கும் புதுச்சேரி அரசா? என்று சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியை அடுத்து வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சி, அக்ரகாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலனி மற்றும் ஊர் மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும் என்றால் கிராமத்தை ஒட்டியுள்ள சங்கராபரணி ஆற்றைக் கடந்து அடக்கம் செய்ய வேண்டும். ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் நீச்சல் தெரிந்த 4 இளைஞர்கள் பிணத்தை வாழை மரத்தில் வைத்து அக்கரைக்கு இழுத்துச் சென்று இறுதி நிகழ்ச்சி செய்ய வேண்டும். எனவே கிராமத்திலேயே சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று பல நாள் கோரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தது.
இத்தகைய அவல நிலையை கண்டித்தும், ஆற்றில் மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன் வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் திருக்காஞ்சி கிராமத்தில் இருந்து, வில்லியனூர் தாசில்தார் அலுவலகம் நோக்கி சவப்பாடை ஊர்வலம் நடத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையல் புதன்கிழமை(டிச 1) திருக்காஞ்சி கிராமத்தில் கொட்டும் மழையில் தாரைத் தப்பட்டத்துடன் துவங்கிய போராட்டத்திற்கு சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா தலைமை தாங்கி பேசுகையில்,
தீண்டாமை ஒழிப்பு முன்னனி, தமிழகம் மற்றும் புதுவையில் பல ஆய்வுகளை நடத்தி வருகிறது. இப்பகுதியில் நீண்ட காலமாக சுடுகாடு இல்லாதது தெரிய வந்தது. சுடுகாட்டுக்கு பாதை இருக்கு, சுடுகாடு இருக்கிறது என்றே இன்றைய ஆட்சியாளர்கள் கூறிவரும் நிலையில் ஆற்றுக்கு அந்தப்பக்கம் சுடுகாடு உள்ள இடத்தில் கே° நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கி தர முடிகிறது. ஆனால் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் தலித் மக்களுக்கு சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கி தர முடியாதது தான் தலித் மக்கள் உரிமையை பாதுகாக்கும் அரசா? என்று புதுச்சேரி அரசை குற்றம் சாட்டினார்.
முன்னதாக இப்போராட்டத்திற்கு முன்னனியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி, சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் தலித் சுப்பையா, தவமணி, கொளஞ்சியப்பன், கலிவரதன், மணிபாலன்,இன்னரசு,ஜானகி, வாலிபர் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சரவணன் சிஐடியூ நிர்வாகிகள் நிலவழகன், சிவக்குமார், குணசேகரன், விவசாய சங்க நிர்வாகிகள் உலகநாதன், முருகையன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்ட துணை ஆட்சியர் உறுதி
புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியர் அருணாச்சலத்தை, தீண்டாமை ஒழிப்பு முன்னனி நிர்வாகிகள் சந்தித்து பேசுகையில்: திருக்காஞ்சி குடியிருப்பு மக்களுக்கு மனைப்பட்டா வழங்கவும், சுடுகாட்டுக்கு ஆற்று மேம்பாலம் கட்டுவதற்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு சில மாதங்களில் அதற்கான பணிகள் செய்ய ஆவண செய்யப்படும் என்றும் துணை ஆட்சியர் அருணாச்சலம் உறுதியளித்தார்.
இப்போரட்டத்தை யொட்டி திருக்காஞ்சி கிராமம் முழுவதும் போலிஸார் குவிக்கபட்டு இருந்தனர்.
படம் உள்ளது